இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் கடுமையான கட்டத்திற்குள் சென்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் சையத் அலி கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் எனக் கூறியுள்ளார். தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பதிவில், ஈரானின் வான்பகுதி அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கமேனி எங்கு இருக்கிறார் எனத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் உயிரிழக்கக்கூடாது என்பதால் அவரை கொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதலில், ராணுவ கட்டுப்பாட்டு மையங்களில் உயர் அதிகாரிகள் பலி ஆனதாகவும், அரசு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் உட்பட சிலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தாக்குதலை கண்டித்து, அதனை கோழைத்தனமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில், இந்த போர் முக்கிய விவாதமாக இருந்து வந்தது. டிரம்ப் இதில் பாதியிலேயே வெளியேறியதற்காக, போருக்கான சமாதானம் காணும் முயற்சியாக அந்த நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் விளக்கியிருந்தார். எனினும், டிரம்ப் அதை மறுத்து, மிக முக்கியமான இன்னொரு நிகழ்வுக்காகவே நாடு திரும்பினேன் என கூறினார்.
ஜி-7 தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் அமைதிக்காக உறுதிபூண்டனர். இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது எனவும், சர்வதேச எரிசக்தி சந்தைகளின் நிலையை கவனிக்க வேண்டியதுண்டு என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.