வாஷிங்டன்: மோடி எனது சிறந்த நண்பர். தன்னுடன் இணைந்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே, இரு வேட்பாளர்களும் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவர முயற்சிக்கின்றனர். குறிப்பாக, கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை எப்படியாவது பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் மனதில் இடம் பிடிக்க டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
இதற்கிடையில், வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த டிரம்ப், இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இங்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
எனது ஆட்சியில் இது நடந்திருக்காது. கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை புறக்கணித்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்துக்களைப் பாதுகாப்போம், அவர்களுக்கு எதிரான நிறவெறி தாக்குதல்களை நிறுத்துவோம்.
எனது ஆட்சியில் உங்கள் விடுதலைக்காக போராடுவோம். எனது சிறந்த நண்பர் மோடியுடன் இணைந்து, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவோம். கமலா ஹாரிஸ் அதிக வரிகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி சிறு வணிகங்களை அழித்தார். ஆனால் நான் அவற்றையெல்லாம் ரத்து செய்து பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தினேன். முன்பை விட சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.