இஸ்லாமாபாத்: ஐ.நா. குழு வலியுறுத்தல்… இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐ.நா.குழு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இது உள்நாட்டு விவகாரம் என்று பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா. குழு தீவிர கவலைகளை எழுப்பியது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் குழுவின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தானின் அரசு, இது உள்நாட்டு விவகாரம் என பதிலளித்துள்ளது.