இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், “இராணுவ ஊடுருவல் நடக்கும். அது தவிர்க்க முடியாதது, எனவே நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் என்ன தந்திரோபாயங்களைக் கையாள வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அரசுக்கு தெரிவித்துள்ளதாக கவாஜா முகமது ஆசிப் கூறினார். அதே நேரத்தில், விரைவில் ஒரு ஊடுருவல் நடக்கும் என்று அவர் நம்பியதற்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த கவாஜா முகமது ஆசிப், “இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். அதே நேரத்தில், நமது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” என்றார்.

போரைத் தவிர்க்க பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த கவாஜா முகமது ஆசிப், “நாங்கள் வளைகுடா நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளை தொடர்பு கொண்டுள்ளோம். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து தெரிவித்துள்ளோம். அரேபிய வளைகுடாவில் உள்ள எங்கள் நண்பர்கள் சிலர் இரு தரப்புடனும் பேசியுள்ளனர்” என்றார். இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் நிதானத்தை கடைபிடிக்குமாறு சீனா நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிலைமையை தணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாகவும் அது கூறியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடத் தயங்குகிறது என்று கவாஜா முகமது ஆசிப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் உறவை தாங்களே தீர்மானிக்கும் என்று கூறினார். எவ்வாறாயினும், அமெரிக்க வெளியுறவுத்துறை இரு தரப்புடனும் தொடர்பில் இருப்பதாகவும், “பொறுப்பான தீர்வை” நோக்கி செயல்படுமாறு வலியுறுத்தியது.