அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவுக்கு 100 சதவீதம் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு, “அமெரிக்கா சீனாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை, மாறாக உதவ விரும்புகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்த டிரம்ப், அந்த வரி வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

இந்த முடிவால் சீனப் பொருட்களுக்கான வரி மொத்தம் 130 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு சீன வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. “அமெரிக்கா இரட்டை நிலைபாடு கடைபிடிக்கிறது. சீனா போராட விரும்பவில்லை, ஆனால் போராட பயப்படவில்லை” என்று சீன வெளியுறவுத்துறை கடுமையாக தெரிவித்தது. இது உலக வர்த்தக உறவில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது சமீபத்திய அறிக்கையில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் மதிக்கப்படுகிறவர். அவருக்கு கடினமான காலம் இது. ஆனால், அமெரிக்கா சீனாவிற்கு உதவ விரும்புகிறது, எதிரியாக அல்ல” என்று கூறியுள்ளார். இதன் மூலம் வரி முடிவு குறித்து ஏற்பட்ட சர்ச்சையை தணிக்க முயற்சித்துள்ளார்.
இந்த நிகழ்வு, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையேயான வர்த்தக போர் இன்னும் தீவிரமாக இருக்கிறதைக் காட்டுகிறது. டிரம்ப் தனது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி கொள்கையை கடுமையாக்கி வந்தாலும், சர்வதேச அழுத்தம் காரணமாக அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் சிறிது ஆட்டம் கண்டுள்ளார். இதன் விளைவுகள் வரவிருக்கும் நாட்களில் தெளிவாகும்.