லிமாசோல்: பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு இந்தியா வேகமாக முன்னேறும் இந்தியா என்று சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக அவர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்தில் அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார்.
கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். சைப்ரஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்நிலையில், லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
6 தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரே அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது நிகழ்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது. இன்று உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டணம், அதாவது யுபிஐ மூலம் நடைபெறுகிறது. பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இதனுடன் தொடர்புடையவை. இதில் சைப்ரஸையும் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதை நான் வரவேற்கிறேன்.
புதுமை இந்தியாவின் பொருளாதார வலிமையின் வலுவான தூணாக சிவில் விமானப் போக்குவரத்து மாறியுள்ளது. இந்தியா, சைப்ரஸ் மற்றும் கிரேக்க வணிக மற்றும் முதலீட்டு கவுன்சில் நிறுவப்பட்டதை வரவேற்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக மாறக்கூடும். இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அழைக்கிறேன் என தெரிவித்தார்.