தஞ்சாவூர்: பயிர் இன்சூரன்ஸ்… திருவையாறு வட்டாரத்திற்கு அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு காரீப் (குறுவை ) பருவத்தில் நெல் பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 36, 500 ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 730 ஆகும். காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை மாதம் 31-ந் தேதி ஆகும்.
கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்யும்போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.