நம் அண்டை நாடான சீனா, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை வழங்கி உள்ளது. இந்த அமைப்பின் மூலமாக பாகிஸ்தானின் வான்வெளிக்குள் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தால், அவற்றை விரைவில் கண்டுபிடித்து அழிக்கும் திறமை இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்புத் தரப்புக்கு உடனடி எச்சரிக்கையும் வழங்கும் என்று பாக்., தரப்பு வாதிட்டது.
ஆனால், கடந்த அதிகாலை இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்த சீன தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் தோல்வியடைந்தது. நம் ராணுவம் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பாகிஸ்தான் வான்வெளிக்குள் தடையின்றி நுழைந்து பயங்கரவாத முகாம்களை தாக்கின. அந்த தருணத்தில் சீனாவின் பாதுகாப்பு அமைப்பு செயலற்றதுபோல் இருந்தது.
இந்த தாக்குதலுக்காக இந்தியா, பிரான்ஸில் இருந்து பெற்ற ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியது. குறைந்த உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் ரேடார் கண்காணிப்புக்கு எட்டாத வகையில் பணி செய்தன. இதனால், முன்னேற்பாடு எதுவும் இல்லாமல், இந்திய தாக்குதல் நேரடியாக இலக்குகளை சுட்டெறிந்தது.
இந்த தாக்குதலின் வெற்றி, நம் ராணுவத்தினர் தேர்ந்தெடுத்த ஆயுதங்களின் திறமையை மட்டுமல்ல, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பின் கோளாறுகளையும் வெளிச்சமிட்டுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப ஆதரவில் இருந்தும் பாக்., பாதுகாப்பு துறை முழுமையாக தோல்வியடைந்துள்ளது என்பது, சர்வதேச ரீதியில் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது.
பாகிஸ்தானின் எதிர்ப்புப் படைகள், தங்களுடைய விமானங்கள், ராடார் அமைப்புகள், ஏவுகணை தடுப்புச் சிஸ்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தும் இந்த தாக்குதலை தடுக்கும் வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் இந்தியா சுலபமாக தாக்கி திரும்பியுள்ளது. இது அந்நாட்டின் பாதுகாப்பு நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்த தாக்குதலில் இந்தியா பாக்., உள்நாட்டின் முக்கிய பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தேர்ந்தெடுத்து அழித்துள்ளது. அத்துடன், குறைந்த பறக்கும் உயரம், எலக்ட்ரானிக் மோசடியால் எதிரியின் ராடாரை தவிர்க்கும் திறன், குறியீட்டுத் தொலைவுகளில் தாக்கும் திறன் ஆகியவை இந்த ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் மீது உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனா வழங்கிய பாதுகாப்பு சிஸ்டத்தின் செயல்திறனைப் பற்றியும் சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளன.
இந்த தாக்குதல் மூலம், இந்தியா தன்னுடைய ராணுவத்திற்கான ஆயுதத் தயாரிப்புகளிலும், தாக்குதலுக்கான முன்கூட்டிய திட்டமிடலிலும், மிகுந்த முன்னேற்றம் அடைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான வெற்றிகள், எதிர்காலத்தில் இந்தியா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு புதிய திசையைத் தரும்.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவாளர்கள் எதிர்காலத்திலும் இந்த விதமான தொழில்நுட்ப பின்தங்கிய சூழ்நிலையைத் தொடர்ந்தால், இந்திய தாக்குதல்களை எதிர்த்து தடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பது உறுதி.