புதுடில்லி: விடிய, விடிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை கதற விட்டுள்ளன நம் முப்படைகள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்களது நாட்டுக்குள் இந்திய படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த முடிவு செய்தது. இந்தியாவின் வட மாநிலங்களில் தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.
இதையடுத்து, எல்லை பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர், அவந்திபுரா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர், நல், பலோடி, உத்தர்லை, குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் ஆகிய 15 நகரங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வீசத் தொடங்கியது.
சண்டிகர் நோக்கியும் பாகிஸ்தான் டிரோன்கள் அணிவகுத்து வந்தன. இதன் மூலம் இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி போரை தொடங்குவதாக கருதப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் அலை அலையாக டிரோன்களை இந்தியாவுக்குள் அனுப்பியது. பாகிஸ்தான் இத்தகைய செயலில் ஈடுபடும் என்று ஏற்கனவே இந்திய ராணுவம் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.
அதன்படி, ஐ.சி.யு.ஜி. (ஒருங்கிணைந்த ஆளில்லா வான் பாதுகாப்பு கருவி), யு.ஏ.எஸ். (ஆளில்லா வான் பாதுகாப்பு கருவி) மற்றும் ரஷியாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தயாராக இருந்தன.
ஒரே சமயத்தில் 15 நகரங்கள் மீது டிரோன்களை பறக்க விடுவதால் இந்தியாவை திணறடிக்கலாம் என்று பாகிஸ்தான் கருதியது. ஆனால் இந்திய விமானப்படை அந்த டிரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது.
நேற்று இரவு நீண்ட நேரத்துக்கு இந்த பதிலடி நடந்தது. மொத்தம் 57 டிரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அதன் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் அடங்கவில்லை. டிரோன்களை தொடர்ந்து பாகிஸ்தானின் போர் விமானங்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய தொடங்கின. இதையடுத்து இந்திய விமானப்படை தனது அதிரடி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து பாகிஸ்தானின் 4 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. அந்த போர் விமானத்தையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதனால் 3 நாள் போரில் பாகிஸ்தான் 5 போர் விமானங்களை இழந்து இருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவை லேசாக சீண்டி பார்த்த பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட இந்திய முப்படைகளும் முடிவு செய்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அடுத்தடுத்து அதிரடி தாக்குதலை தொடங்கின. விடிய விடிய இந்த தாக்குதல் நடந்தது. இதனால் கதிகலங்கி போய் உள்ளது பாகிஸ்தான்.