
புதுடில்லியில் இருந்து கிடைத்த தகவலின் படி, பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசாரின் விவரங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிரடித் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைமையகம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அந்த அமைப்பைச் சேர்ந்த அப்துல் மாலிக், காலித் மற்றும் முதாசிர் ஆகிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதிச்சடங்கு முரிட்கேயில் நடந்தது.இந்த நிகழ்வில் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விவரங்களை இந்திய ஆயுதப்படைகள் உலகிற்கு வெளியிட்டுள்ளன. லாகூர் IV கார்ப்ஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பயாஸ் ஹுசைன் ஷா, லாகூர் 11வது காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ், பிரிகேடியர் முகமது புர்கான் ஷபீர் ஆகியோர் இதில் அடங்குவர்.மேலும், பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் உஸ்மான் அன்வர் மற்றும் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் மாலிக் சொஹைப் அகமது பெர்த் ஆகியோரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படங்களும், விவரங்களும் பாகிஸ்தான் ராணுவத்துடன் பயங்கரவாத அமைப்புகளுக்கு உள்ள தொடர்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினாலும், இந்த நிகழ்வுகள் அந்த நாட்டின் உண்மையை காட்டுகிறது.இந்த தகவல்கள் பாகிஸ்தானை உலக நாடுகளுக்கு முன் பொய் மறைக்கும் நாடாக அம்பலப்படுத்துகின்றன.