புதுடில்லியில் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, காஷ்மீர் பிரச்னையில் எந்த வெளிநாட்டு மத்தியஸ்தமும் தேவையில்லை. இது இருதரப்பு விவகாரம் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்பு அடிப்படையிலானது. ஆனால் பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த ஒப்பந்தத்தின் நடைமுறை கேள்விக்குறியாக உள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை விடுவிக்கவேண்டியது தான் முக்கிய பிரச்னை.
அந்தப் பகுதிக்கு உரிமை கோருவதற்கான எந்தவொரு உரிமையும் பாகிஸ்தானுக்கு இல்லை. அதேபோல் பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் குறித்து கடந்த வாரம் அவசர கூட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின.இந்த தகவல்களை பாகிஸ்தான் மறுத்தாலும், அவர்களது அணு ஆயுத நடவடிக்கைகள் ஆசியா மட்டுமின்றி உலகத்திற்கே பாதுகாப்பு சவாலாக மாறுகிறது. இந்தியா அதற்கு பயப்படவோ, அடிபணியவோ போவதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அணு ஆயுதங்களை பாகிஸ்தான் கையில் எடுத்தால், அதன் பாதிப்பு அவர்களது பிராந்தியத்தையே தாக்கும் என்பதை இந்தியா உலக நாடுகளுடன் பேசியபோது எச்சரிக்கை செய்துள்ளது. மத்தியஸ்தம் இல்லாமல் நேரடி பேச்சுவார்த்தை வழியே தான் சிக்கல்களை சமாளிக்க முடியும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும் மாற்றமற்றதாகவும் இருக்கிறது. எங்களது பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.