சென்னை: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வை நடத்த உள்ளது. இது தொடர்பாக, தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் முதல் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படுகிறது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு ஆகும். அதன்படி, பயிற்சி வகுப்பில் சேர ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், விண்ணப்பப் படிவத்தின் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் சென்னை கிண்டியில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தை அணுகலாம்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.