சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவி ஜெயஸ்ரீக்கு, மேற்படிப்பு தொடர பணம் இல்லாத நிலையில், எத்திராஜ் கல்லூரி கட்டணமின்றி சேர்க்கை வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்ச்சி சதவீதம் 95.03 ஆக இருந்தது. அரசு பள்ளி மாணவர்கள் பெரும் சாதனை படைத்த நிலையில், 91.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சிஜிஎச்எஸ்எஸ் பள்ளியில் பயின்று 572 மதிப்பெண்கள் பெற்ற ஜெயஸ்ரீ மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடம் பிடித்தார். ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்விலும் அவர் 92% பெற்று முதலிடம் பிடித்திருந்தார். கூலி தொழிலாளியான பெற்றோரால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி செய்தி வெளியானதை அடுத்து, எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு இலவசமாக மூன்று ஆண்டுகள் படிக்க அனுமதி வழங்கி கௌரவித்தது.
கல்லூரி சேர்மன் முரளிதரன், கல்வி என்பது சேவை என்றும், இப்படி இல்லாத மாணவிகளுக்குக் கல்வி வழங்குவது அவர்கள் வாழ்க்கையையே மாற்றும் என்றும் கூறினார். மாணவி ஜெயஸ்ரீ இதுபற்றி கூறும் போது, நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்பை தொடர முடியுமா என்ற குழப்பத்தில் இருந்ததாக தெரிவித்தார். எத்திராஜ் கல்லூரி சேர்மன் நேரில் அழைத்து வாழ்த்தியும், கட்டணமில்லாமல் சேர்க்கை வழங்கியும் மறக்க முடியாத தருணம் வழங்கியதாக கூறினார்.
ஜெயஸ்ரீ இளங்கலைப் பட்டம் முடித்து யுபிஎஸ்சி தேர்வுகள் எழுத விரும்புகிறேன் என்றும், அரசு பணியில் செல்வதுதான் தனது கனவு என்றும் கூறினார். பள்ளி விடுமுறை காலத்திலேயே சிவில் சர்வீசுக்கு தயார் செய்து வருவதாகவும், கல்லூரி படிப்புடன் யுபிஎஸ்சி தேர்வுக்கும் தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.