ஈரான்: இஸ்ரேல் லெபனானில் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை ஈரான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவு மூன்று மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானுக்கு எதிரான போர்நிறுத்த மீறல்களுக்கும், லெபனானுக்கு எதிராக ஜியோனிஸ்ட் ஆட்சி புரியும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா நேரடி பொறுப்பேற்றுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், பெய்ரூட்டுக்கு எந்த ராணுவப்படையும் அனுப்பப்படாது என்றும், ஏற்கனவே புறப்பட்டிருந்த படைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவது உள்ளிட்ட பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.