நீரிழிவு நோய் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு தீவிரமான நிலையாகும். இது இன்சுலின் ஹார்மோன் குறைவோ அல்லது அந்த ஹார்மோனை எதிர்க்கும் உடல் நிலைமையாலோ உருவாகிறது. இந்த காரணங்களால், உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல், அது அதிகரிக்க தொடங்குகிறது. இதனாலேயே நீரிழிவு நோய் தோன்றுகிறது. பெரும்பாலும் இது பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு நோயாகக் கருதப்படும். ஆனால், இன்று வாழ்க்கைமுறை முற்றிலும் மாறி இருப்பதால், குழந்தைகளிலும் இந்த நோய் அதிகம் காணப்படுவதால் பெற்றோரிடம் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில், குறிப்பாக டைப் 2 வகை நீரிழிவு, குழந்தைகளிடையே வேகமாகப் பரவுகிறது. மரபியல் காரணங்கள் மற்றும் உணவியல் பழக்கங்கள் முக்கிய பங்காற்றும் நிலையில், ஆரம்பகட்ட அறிகுறிகளை கவனித்தால், பெரிய பாதிப்புகளுக்குள் செல்லாமல் இந்த நிலையை விரைவில் கட்டுப்படுத்தலாம். குழந்தைகளில் நீரிழிவு நோயின் சில அடிப்படை அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது பெற்றோர்களுக்கு மிகவும் அவசியம்.
முதன்மையாக, குழந்தை திடீரென அதிக தாகம் உணர்வது, அன்றாடம் தேவைக்கு மேல் தண்ணீர் குடிக்க தொடங்குவது, நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இரண்டாவது, காரணமின்றி எடை குறைய தொடங்கினால், அதையும் அவதானிக்க வேண்டும். இது டைப் 1 வகை நீரிழிவில் பொதுவாக காணப்பட்டாலும், டைப் 2 இலும் இது ஒரு சாத்தியக்கூறு.
மூன்றாவது, குழந்தை எதுவும் செய்யாமல் சோர்வாகவே இருப்பது, ஆர்வமின்றி செயல்படுவதும் கவனிக்கப்படவேண்டும். சோர்வு, பலவீனம் போன்றவை நீரிழிவு நோயின் மறைமுகக் குறியீடுகளாக இருக்கலாம். மேலும், சில நேரங்களில் குழந்தைகளின் தோலில் கருப்பு நிற திட்டுக்கள் தோன்றலாம். குறிப்பாக கழுத்து, அக்குள், இடுப்பு போன்ற இடங்களில் தோல் அடர்த்தியாக கருப்பாக மாறினால், அது Acanthosis Nigricans எனப்படும் ஒரு தோல் நிலையின் அறிகுறியாக இருக்கக்கூடும். இது டைப் 2 நீரிழிவு நோயின் முன்னுறையை காட்டும் ஒன்று.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் குழந்தையிடம் கவனித்தால், உடனே மருத்துவரை அணுகி ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். ஆரம்பகட்டத்தில் இந்த நோயை கண்டறிந்து, உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை சரிசெய்தல் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்துவது சாத்தியம்.
குழந்தையின் ஆரோக்கிய வாழ்க்கைக்காக பெற்றோர் விழிப்புணர்வுடன் இருப்பது தான் முக்கியம்.