ஒட்டாவா: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஞாயிறன்று தொலைபேசி வழியாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடந்த இந்த உரையாடல், எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பையும், பொதுவான முன்னுரிமைகளையும் முன்னெடுக்க வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி கனடியர் ஆனந்த், 58 வயதில், சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, இரண்டு வாரங்களில் இந்த மாற்றம் நடைபெற்றது. ஆனந்த் இதற்கு முன் புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், அதற்கு முன் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர்.
“கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் நடந்த சிறப்பான உரையாடலை நன்றியுடன் நினைக்கிறேன். இந்தியா-கனடா உறவுகளின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. அவருடைய புதிய பொறுப்புக்கு நல்வாழ்த்துகள்” என ஜெய்ஷங்கர் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த கனடா அமைச்சர் அனிதா ஆனந்த், “இந்தியா-கனடா உறவுகளை வலுப்படுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், மற்ற முக்கியமான முயற்சிகளை முன்னெடுக்கவும் நடந்த பயனுள்ள உரையாடலுக்கு நன்றி. தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என தெரிவித்தார்.
மே 14 அன்று, அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ஷங்கர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள நல்லுறவுத் தொடர்புகள், இருநாடுகளுக்கிடையே நிலவும் சிக்கல்களை சமாளிக்க மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.