சென்னை: வாழ்க்கை தரத்தை பாதிக்கக்கூடும்… 60 வயதுக்கு மேல் பசியின்மை ஏற்படுவது சாதாரணமானதுதான் என்றாலும், இது உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கக்கூடும். பசியின்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பசியின்மையின் அறிகுறிகள்:
உணவு உண்பதில் ஆர்வம் இல்லாமை
எடை இழப்பு
சோர்வு
பலவீனம்
மனச்சோர்வு
தூக்கமின்மை
தோல் வறட்சி
முடி உதிர்தல்
பசியின்மைக்கான காரணங்கள்: அசிடிட்டி, குடல் அழற்சி, மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்ற செரிமான மண்டல கோளாறுகள் பசியின்மையை ஏற்படுத்தக்கூடும்..
பக்கவாதம், அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் போன்ற நரம்பியல் கோளாறுகள் உணவு உண்ணும் செயல்பாட்டை பாதித்து பசியின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம். தைராய்டு கோளாறுகள், நீரிழிவு நோய், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் போன்றவை பசியின்மையை ஏற்படுத்தக்கூடும். மேலும், புற்றுநோய், அதற்கான சிகிச்சைகளும் ஒரு முக்கிய காரணமாகும்.
தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு பக்க விளைவாக பசியின்மை ஏற்படும். குறிப்பாக ரத்த அழுத்த மருந்துகள், மனச்சோர்வு மருந்துகள், வலி நிவாரணிகள் போன்றவை பசியின்மையை ஏற்படுத்தும்.
வயதாவதால் சுவை, வாசனை உணர்வுகள் குறைந்து உணவு உண்ணும் ஆர்வத்தை குறைக்கக் கூடும். மேலும், மனச் சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்றங்கள் பசியின்மை ஏற்பட முக்கிய காரணங்களாகும். வயதாவதால் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படக்கூடும். மேலும், உறவினர்கள் அல்லது நண்பர்களின் இழப்பு, தனிமை, போன்ற சமூக காரணிகளும் பசியின்மையை ஏற்படுத்தும்.
உங்களுக்கு பசியின்மை பிரச்சனை இருப்பது போல உணர்ந்தால், அதற்கான உடல் கோளாறுகள் மருந்துகள் அல்லது மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம். ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை உண்பதற்கு பதிலாக, உணவைப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கும்.