புதுடில்லி: காரில் சாகசம் செய்த டூப் ஸ்பைடர்மேனுக்கு ரூ.26,000 அபராதம் விதித்து டில்லி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
90ஸ் -களில் ஹீரோ ஸ்பைடர் மேன். இன்றும், அவரது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவரது ரசிகர்கள் ஷாப்பிங் செய்து ஸ்பைடர் மேன் ஆடைகளை வாங்குகிறார்கள். இன்றும், ஸ்பைடர் மேன் ஆடை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படி ஒரு ரசிகர் செய்த பயங்கர சம்பவத்தை பற்றி பார்ப்போம்…
டெல்லியை அடுத்த துவாரகாவில் ஸ்பைடர் மேன் உடையில் ஆதித்யா என்ற 20 வயது இளைஞர் தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்துக்கொண்டு ஸ்கார்பியோ காரின் பானட்டில் அமர்ந்து போஸ் கொடுத்தப்படி துவாரகாவை சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த போலீசார் இந்த டூப் ஸ்பைடர் மேனை பின்தொடர்ந்து மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த ஆதித்யாவின் நண்பர் கவுரவ் சிங்கையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காருக்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை. மேலும், டிரைவர் சீட் பெல்ட் அணியாமல், அபாயகரமாக வாகனம் ஓட்டி வந்தார். அதனால் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டூப் ஸ்பைடர் மேனுக்கு ரூ.26,000 அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் எச்சரித்து விடுவித்தனர். இதனுடன், டூப் ஸ்பைடர்மேனின் செயல்களின் வீடியோவை டெல்லி போலீசார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.