திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், விழுப்புரம் கோட்டத்தின் மூலம் வருகிற 29ம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வேலூரிலிருந்து திருத்தணிக்கு 80 பேருந்துகளும், அரக்கோணத்திலிருந்து 45, காஞ்சிபுரத்திலிருந்து 35, திருப்பத்தூரிலிருந்து 35, குடியாத்தத்திலிருந்து 30, ஆரணியிலிருந்து 30, திருப்பதியிலிருந்து 20, சென்னையிலிருந்து 25, திருவண்ணாமலையிலிருந்து 15, அரக்கோணத்திலிருந்து 7 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருத்தணி வழியாக செல்லும் (வழி) 30 பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இது தவிர சித்தூர், திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, பள்ளிப்பட்டு, புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் திருத்தணிக்கு மொத்தமாக 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து தேவையெனில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.