புதுடெல்லி: விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 41 நாடுகளில் மாணவர் இறப்புகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கனடாவில் 172 இந்திய மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். இது தவிர, இந்த தாக்குதலில் 19 இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் 9 பேர் கனடாவிலும், 6 பேர் அமெரிக்காவிலும் கொல்லப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் எம்பி கொடிக்குனில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவலை அளித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், “விபத்து, மருத்துவ சிகிச்சை என பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அடுத்து 58 மாணவர்களுடன் இங்கிலாந்தும், 57 மாணவர்களுடன் ஆஸ்திரேலியாவும், 37 மாணவர்களுடன் ரஷ்யாவும் உள்ளன. “இதற்கிடையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டதற்கான காரணங்களை அமெரிக்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.