மும்பை: வனப்பகுதியில் இருந்து பெண் மீட்பு… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயது பெண் காட்டிற்குள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டம், சாவந்த்வாடி தாலுகாவிற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஆடு, மாடு மேய்பவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது பெண் ஒருவரின் கதறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது வெளிநாட்டு பெண் மரத்தில் இரும்புச் சங்கிலியால் காலில் கட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இரும்பு சங்கிலியை அகற்றி அப்பெண்ணை மீட்டனர். உடல் மெலிந்து எலும்பும் , தோலுமாக மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார்.
போலீசார் விசாரித்த போது சரியாக பேச முடியாமல் ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகவும், தன்னை கணவரே இரும்பு சங்கிலியால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
போலீசார் கூறுகையில், 50 வயது மதிக்கத்தக்க அப்பெண் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி உள்ளது. சுமார் 40 நாட்களுக்கு மேல் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.