வாஷிங்டனில், கருணை மிகுந்த தீர்ப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார். 88 வயதான இவர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். நீதிமன்ற அறையில் அவரது நகைச்சுவை உணர்ச்சி மற்றும் கருணை மனப்பாங்கு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
அவரது தீர்ப்புகள் எவரின் மனதையும் புண்படுத்தாதவாறு வழங்கப்பட்டு, வழக்குகளை கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்தின. ‘காட் இன் பிராவிடன்ஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இதன் காரணமாக உலகின் கனிவான நீதிபதி என்ற பெயரை பெற்றார். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை தங்கள் இதய நீதிபதியாக மதித்தனர்.
ரோட் தீவின் பிராவிடன்ஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான வழக்குகளை அவர் விசாரித்தார். தனது கடைசி சமூக ஊடகப் பதிவில், தனது உடல் நலம் குணமாக பிரார்த்திக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இது அவரது மனிதநேயத்தையும் எளிமையையும் வெளிப்படுத்தியது. அவரது வாழ்க்கை நீதியும் கருணையும் ஒன்றிணைந்த சிறந்த உதாரணமாகவே விளங்கியது.
அவரது மனைவி ஜாய்ஸ் காப்ரியோவுடன் அவர் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள், ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினருடன் வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையையும் சமூக நலனுக்காக செலவழித்த அவரது காலத்தையும் மக்கள் என்றும் நினைவுகூருவார்கள். நீதிபதி பிராங்க் காப்ரியோவின் மறைவு உலகம் முழுவதும் ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தியுள்ளது.