புதுடெல்லி: அரசியல் நன்கொடைகளுக்கான வரிச்சலுகை 2022-23 நிதியாண்டில் ரூ.4,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பட்ஜெட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த, ஒன்பது ஆண்டுகளில், அரசியல் கட்சிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள், பிற அமைப்புகள், தனிநபர்கள் நன்கொடை அளித்து வருவது கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.3,967.54 கோடி வரிச்சலுகை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2021-22ல் அரசியல் நன்கொடைகளுக்கான வரிச் சலுகை ரூ.3,516.47 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, 2022-23 நிதியாண்டில் அரசியல் நன்கொடைகளுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கு 13 சதவீதம் அதிகம். இது 2014-15ல் ரூ.170.86 கோடியாக மட்டுமே இருந்தது. ஆக, 2014-15 முதல் ஒன்பது ஆண்டுகளில் அரசியல் நன்கொடைகள் மீது பெறப்பட்ட வரிச் சலுகைகளின் மொத்த வருவாய் பாதிப்பு ரூ.12,270.19 கோடி. 2023-24 நிதியாண்டுக்கான தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ், இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் நன்கொடைகள் தொடர்பான விலக்குகளைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.