தமிழ் நாட்டின் அரசியலில் நடிகர் விஜய் மிகுந்த கவனம் பெறத் தொடங்கிய நிலையில், அவரது பெயரை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழ் மொழி ஆர்வலரும் கவிஞருமான மகுடேசுவரன், விஜய் என்ற பெயரை எப்படி எழுதுவது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, ‘விஜய்’ என்ற பெயரில் முதல் இரண்டு எழுத்துகள் குறில்கள். தமிழில் இந்த நிலைமையில் மூன்றாவது எழுத்தாக “ய்” எனும் தனிமெய் வருவது இயல்பு அல்ல. ஆனால் ‘விஜய்’ என்பது வடமொழிச் சொல் என்பதால், தமிழில் இயல்பான எழுத்தமைப்பைக் கடைப்பிடிக்காது. இதுபோல, ‘அஜய்’, ‘உதய்’, ‘வினய்’ போன்ற பெயர்களும் வடமொழியைச் சேர்ந்தவை. அதனால் தான் இவையெல்லாம் தமிழில் இயற்கைக்கே முரணான எழுத்துவடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழில் இதுபோன்ற பெயர்களை எழுதும்போது ‘விஜய்’ என்று எழுதினால், அதனுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது ‘விஜயை’, ‘விஜயுடன்’, ‘விஜயின்’ என எழுதுவது தவறாகும். காரணம், ‘விஜய்’ என்பது ‘விஜை’ + ‘ஐ’ என விகுதி சேரும் போது இடையில் “ய்” எனும் உடம்படுமெய் எழுத்து தேவைப்படுகிறது. எனவே ‘விஜையை’ என்பதற்கு சரியான வடிவம் ‘விஜய்யை’ எனும் எழுத்துவடிவமாகவே அமையும்.
மொத்தத்தில், தமிழில் வடசொற்கள் பயன்படும் போதும், அதன் இலக்கண விதிகளைத் தவிர்க்க முடியாது. தமிழ் உணர்வைப் பாதுகாக்கும் வகையில், ‘விஜய்’ என்ற பெயரை ‘விஜய்யை’, ‘விஜய்யுடன்’, ‘விஜய்யின்’ போன்ற வடிவங்களில் எழுதுவதுதான் இலக்கண ரீதியாகவும், மொழியியற்கைக்கும் ஏற்றதாகும் என மகுடேசுவரன் கூறுகிறார்.