தஞ்சாவூர்: நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தஞ்சாவூரில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சாவூர் கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசர் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை வளாகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி (இரு மையங்கள்), உணவு பதன தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்), கேந்திரிய வித்யாலயா, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் எழுதுவதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 165 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் கண்காணிப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் மேற்பார்வையில் ஒவ்வொரு மையத்திலும் உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.