சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மட்டும் துணை ராணுவத்தினரோடு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, மாநிலம் முழுவதும் ஒரு லட்சம், சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 3 முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள், ராணி மேரிக் கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் ஆகிய மூன்று மையங்களில் எண்ணப்படுகின்றன.
அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அறிவித்துள்ளன.