ஜபல்பூர்: ஜபல்பூரில் பர்கி அணையில் சுற்றுலாப்பயணிகள் படகு கவிழ்ந்த விபத்தில் தனது மகனை மார்பில் அணைத்தபடியே இறந்து கிடந்த தாய் புகைப்படங்கள் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒன்பது உயிர்கள் பலியானது. டெல்லியிலிருந்து வந்த அந்த குடும்பத்தின் பயணம் எதிர்பாராத துயரத்தில் முடிந்தது.
மீட்புக்குழுவினர் நீரில் இருந்து அந்த அம்மாவையும் குழந்தையையும் எடுத்தபோது, பார்த்தவர்களின் கண்களில் நீர் வரச் செய்த காட்சியாயிருந்தது அது. உயிர் பிரிந்த பின்னும் தனது குழந்தையை மார்போடு அணைத்திருந்த அந்த கைகள் தளரவில்லை. தானணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டுக்குள் குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க, இறுதி நொடியிலும் அந்த அம்மா போராடியிருந்தாள்.
லைஃப் ஜாக்கெட்டின் உதவியால் அந்த அம்மாவுக்கு தனியாக தப்பிக்க முடிந்திருக்கலாம். ஆனால் தனது உயிரைவிட மகனின் சுவாசத்தை மேலானதாகக் கருதிய அந்த அம்மா, மகனின்றி இருக்கும் உலகத்திற்குத் திரும்ப விரும்பியிருக்க மாட்டாள்.
உயிர் பிரியும் தருணத்திலும் தனது கரங்களில் இருந்த பொக்கிஷத்தை மரணத்திடம் ஒப்படைக்காமல் அவர் அணைத்துக் கொண்டிருந்தாள். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்கள் கண்களை கலங்கச் செய்து வருகிறது.