தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்
புளித்த தயிர் – 1 கப்
தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன் + 1/2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
முந்திரி – 5-6
பெருங்காயத் தூள் – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
ரவை – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
ஆப்ப சோடா – 1 சிட்டிகை
செய்முறை: முதலில் ஒரு பௌலில் அவலை எடுத்து நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் தயிரை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் முந்தரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, பின் கொத்தமல்லியை சிறிது தூவி கிளறி விட வேண்டும். அடுத்து அதில் 1 கப் ரவையை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். பின் ஊற வைத்த அவலை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 1/2 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் வதக்கிய பொருட்களை சேர்த்து கிளறி, மிகவும் கெட்டியாக இருந்தால், இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது ஆப்ப சோடா சேர்த்து கிளறி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான அவல் ரவா இட்லி தயார்.