கான்பூர்: கான்பூரில் இருந்து டில்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் எலி ஒன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 140 பயணிகளுடன் விமானிகள் மற்றும் பணியாளர்களும் இருந்தனர். பயணிகள் ஒருவரால் எலி கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக விமான குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். பின்னர் பணியாளர்கள் விமானத்தின் உள்ளே சென்று எலியை பிடிக்க முயன்றனர். ஆனால் எலி அங்கும் இங்கும் ஓடியதால் அதை பிடிக்க ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகப் போராட வேண்டி வந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு எலி சிக்கியது.
எலியைப் பிடித்த பின் பயணிகள் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஆனால் இந்த செயல்முறை காரணமாக விமானம் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். வழக்கமாக தொழில்நுட்ப கோளாறு அல்லது பாதுகாப்பு சோதனை காரணமாக விமானங்கள் தாமதமாவதே அன்றாடம் நடக்கும் ஒன்று. ஆனால் எலி காரணமாக இத்தனை பெரிய தாமதம் ஏற்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த சம்பவம் இண்டிகோ விமான சேவைக்கு கேள்விக்குறி எழுப்பியுள்ளது. பணம் கொடுத்து பயணம் செய்யும் பயணிகள் இத்தகைய சிக்கலில் சிக்குவதை எப்படிச் சமாளிப்பது என்ற விவாதம் எழுந்துள்ளது. ஒரு எலி காரணமாக பயணம் தாமதமானது பயணிகள் மனதில் சிரமத்தையும், விமான நிறுவனம் மீது அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.