டெல்லி: வாட்ஸ்அப் கணக்கைத் தடை செய்வது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், “வாட்ஸ்அப் பயன்படுத்துவது அடிப்படை உரிமை அல்ல, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அரட்டை செயலியான ஜோஹோவைப் பயன்படுத்தவும்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
ராமன் குந்தரா என்ற பெண் மருத்துவர், தனது வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அத்தகைய தடையை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது தனிப்பட்ட தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப் அவசியம் என்று அவர் தனது வாதங்களை முன்வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா, “இந்திய அரசியலமைப்பின் கீழ், சேவைகளைக் கோர வாட்ஸ்அப் போன்ற தனியார் நிறுவனங்களை அணுக முடியாது. வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவது அடிப்படை மனித உரிமை அல்ல, அதற்கு பதிலாக, எங்கள் உள்நாட்டு தயாரிப்பான ஜோஹோவின் அரட்டை செயலியைப் பயன்படுத்துங்கள்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்திய நிறுவனமான ஜோஹோவால் 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரட்டை செய்தியிடல் செயலி தற்போது பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.