பீகார்: பீகாரில் ஜன் சுராஜ் கட்சி தொண்டர் படுகொலை: முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.