டில்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் சம்பவத்துக்கு காரணம், பாதுகாப்பு குறைபாடுகள் என தவெக தரப்பில் சொல்லப்பட்டதால் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து தவெக 2-ம் கட்ட தலைவர்களையும் சிபிஐ அதிகாரிகள் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்த நிலையில் கட்சியின் தலைவரான விஜய்க்கும் 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விஜய் தரப்பில், டெல்லிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதுகுறித்த பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்துமாறும் விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விஜய்யை 15-ம் தேதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சம்மன் அனுப்பினர்.
அதன்படி, சி.பி.ஐ. விசாரணைக்காக நேற்று தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் 7 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. அப்போது தவெக தலைவர் விஜய், சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இந்த விசாரணை மாலை வரை நீடிக்கும் என்றும், தேவைப்பட்டால் நாளையும் தொடர வாய்ப்பு உள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.