இஸ்ரேல்: உயிருடன்தான் இருக்கிறேன் என்று மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார் பிரதமர் நெதன்யாகு.
நான் உயிருடன் இருக்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதை இஸ்ரேல் மறுத்தது.
மேலும், நெதன்யாகு பேசும் வீடியோ மற்றும் ஒரு கடையில் அவர் காபி குடிக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியுடன் நெதன்யாகு உரையாடும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், நெதன்யாகுவுடன் மைக் ஹக்கபி நடந்து செல்கிறார்.
அப்போது அவர் நெதன்யாகுவிடம், “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னை அனுப்பினார்” என்று கூறினார்.
அதற்கு நெதன்யாகு பதிலளிக்கும்போது,“நான் உயிருடன் இருக்கிறேன்” என்றார். மேலும், ஈரான் மூத்த அதிகாரிகள் அலி லாரிஜானி, கோலம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, இன்று நான் தாக்குதல் பதிவேட்டில் இருந்த 2 பெயர்களை அழித்துவிட்டேன் என்றார்.