தஞ்சாவூர்: கும்பகோணம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுந்தரவதனத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கும்பகோணம் உட்கோட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பிடி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு அரசலாறு வழிநடப்பு பகுதியில் மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முகில்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கள், தலைமை காவலர் சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த விமல் ராஜ் (38), ராஜா (47) ஆகியோர் என்பதும், அரசலாற்று வடநடப்பு பகுதியில் நிலத்தை தோண்டி மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 250 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.