சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ஜீரோ-எப்ஐஆர்’ பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும்.
முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம். திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.