திருப்பூர்: அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை தவெக தலைவர் விஜய் அளித்துள்ளார்.
திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் பகுதிக்கு ரோடு ஷோ சென்றார்.
இந்த நிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, பேசியவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர் மக்களே. உங்கள் அனைவருக்கும் வனக்கம். வருகிற 16ந்தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட உள்ளோம். அதற்கு முன் உங்களிடம் சில முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறேன்.
நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்க அரசு சார்பில் இ காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.
நிலையற்ற நுல் விலை,மின்சார நெருக்கடியை பகிர்ந்துகொள்ள, கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு ரூ.1,500 யூனிட்டாகவும் வழங்கப்படும்.
நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுவதற்கான காரண்ங்களின் ஒன்று மின் கட்டணம். இது ஜவுளித்துறையை பாதித்துள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை தவெக நிறுத்தி வைக்கும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என்றார்.