தஞ்சாவூர்: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் செங்கல் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், இயற்கை விவசாயியுமான அருமலைக்ோட்டை அரு. சீர். தங்கராசு தனது தொலைநோக்கு திட்டங்கள் அடங்கிய 10 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கல்வி மற்றும் மருத்துவத்தைத் தவிர மற்ற தேவையற்ற இலவசங்களை ஒழித்து, மக்களைத் தற்சார்பு பொருளாதார நிலைக்கு உயர்த்துவதே தனது முதன்மை நோக்கம் என அவர் பிரகடனம் செய்துள்ளார். விவசாயிகள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் இல்லாமல், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகப் பொருட்களை விற்கும் வணிகர்களாக மாற்றப்படுவார்கள் என்றும், இரசாயனமற்ற இயற்கை விவசாயம் கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கான அரசு மானியங்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் நேரடியாகச் சென்றடைய வழிவகை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கவும், மழைநீரைச் சேமித்து பருகும் முறையை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரி, குளங்களைச் சீரமைத்து பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகை செய்வதோடு, இளைஞர்களை ஒருங்கிணைத்து ஊர்தோறும் மரக்காடுகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காவிரித் தாய்க்கு ‘வேளாண் திருவரங்கம்’ எனும் கற்கோவில் அமைத்து ஆறுகளைப் பாதுகாப்பதில் உறுதிகாட்டியுள்ளார். பண்பாட்டுச் சீர்கேட்டிலிருந்து இளைஞர்களை மீட்டு, ‘இயற்கையே இறைவன்’ எனும் சமத்துவச் சிந்தனையை விதைப்பதே தனது லட்சியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்கத் தீவிரமாகப் போராடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
தனியார் குழுக்கடன் நிறுவனங்களின் அநியாய வட்டியைத் தடுத்து, அரசு மூலம் பெண்களுக்குக் குறைந்த வட்டி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் அறிக்கையின் முக்கிய அம்சமாகும். கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கி, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
”மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தவும், உழைக்கும் மக்களின் கௌரவத்தை மீட்கவும் செங்கல் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” . இவ்வாறு அவர் தனது அறிக்கையில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.