தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விமான நிலையக்கான பணியை நாடாளுமன்ற உறுப்பினரோடு இணைந்து அதனை விரைவுப்படுத்தி பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பேன். தஞ்சை திமுகவின் கோட்டையாக உள்ளது. அது மீண்டும் தொடரும் என்று வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக துரை.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். எம்.பி.ஏ. வரை படித்துள்ள இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள உமாநகர் 2-ம் தெருவில் வசித்து வருகிறார். தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளராக இருந்து வரும் இவர், 3 முறை மாநகராட்சி கவுன்சிலர், ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், தஞ்சை மாநகராட்சி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.

முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்திற்கு மத்தியில் வேட்பாளர் சண்.ராமநாதன் மக்களிடம் உள்ள வரவேற்பு, எதிர்பார்ப்பு, தொகுதியின் மேம்பாட்டிற்கு செய்ய போவது என்ன என்ற பல்வேறு கேள்விகளுக்கும் பட்டென்றும், படபடவென்றும் கூறியதில் இருந்து…
தஞ்சை மாநகராட்சியுடன் இணையும் பகுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். தஞ்சையில் விமான நிலையத்துக்கான பணியை நாடாளுமன்ற உறுப்பினரோடு இணைந்து அதனை விரைவுப்படுத்தி பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பேன். கூட்ட நெரிசலை தவிர்க்க பெரியகோயில் பகுதியில் பார்க்கிங் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் கட்டப்படும். மரணப்பாலமாக உள்ள மேரீஸ்கார்னர் பாலத்தின் தொடர்ச்சியை ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டித்து பாலம் கட்டப்படும். பழைய கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து எஸ்.பி. அலுவலகம் வழியாக மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்படும். டி.பி.எஸ்.நகர் பகுதியில் இருந்து சீனிவாசபுரத்தை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும். மேயராக இருந்தபோது பெரியகோவிலை சுற்றி கிரிவலம் செல்வதற்கான நடவடிக்கை எடுத்ததோடு, பக்தர்களுக்கான வசதிகளும் செய்து கொடுத்துள்ளேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி பகுதியில் எந்த சாலைகளும் போடப்படாமல் இருந்தது. நான் பதவி ஏற்ற பிறகு 95 சதவீதம் சாலைகள் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 சதவீத சாலைகளும் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாத அளவுக்கு 2 புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தீர்வு காணப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் சீர் செய்யப்பட்டுள்ளது. குப்பை உடனுக்குடன் அள்ளப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பாராட்டும் வகையில் செயல்படுத்தி உள்ளோம். ஊருக்கு வெளியில் உள்ள அரசு இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம் இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
போக்குவரத்து நெரிசலை போக்க ஹைட்ராலிக் கார் பார்க்கிங், டைடல் பார்க் கொண்டு வந்துள்ளோம். மாமன்னன் ராஜராஜசோழன் அருங்காட்சியக பணி நடந்து வருகிறது. விமான நிலையத்துக்கான பணி தொடங்கப்பட்டு விரைவில் விமான சேவை தொடங்கப்படும். அதே போல் ரெயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. ரூ.30 கோடியில் போடப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் தற்போது ரூ.427 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 4 முறை உபரி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சை விளங்கி வருகிறது.
தமிழகத்தில் முன்மாதிரியான சிறந்த மாநகராட்சிக்கான விருது முதல்-அமைச்சரிடம்,ஸ்மார்ட் சிட்டியில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு 3-வது இடமும், சிட்டி 2.0 திட்டத்தில் இந்தியாவிலேயே முதல் இடத்தை தஞ்சை மாநகராட்சி பிடித்து அதற்கு பரிசாக ரூ.165 கோடி வழங்க உள்ளது. மேலும் தஞ்சையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்கான நவீன சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும். நவீன வசதிகளுடன் அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும். நெல் சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்தப்படும். உழவர் சந்தைகள் போல, நகர பகுதிகளில் உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.
முதல்வர் கொண்டு வந்து திட்டங்களில் போற்றக்கூடிய திட்டம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம், முதியோர் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்குவது, லேப்டாப் வழங்கியது, காலை உணவுத்திட்டம், கரும்பு, நெல்லுக்கான விலை உயர்வு போன்ற திட்டங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சை தி.மு.கவின் கோட்டையாக இருந்து வருகிறது. மக்கள் தி.மு.க. மீது அளவற்ற மதிப்பு வைத்துள்ளனர். நான் மேயராக இருந்த காலத்தில் மக்களுக்கு பல சிறப்பான திட்டங்களை செய்துள்ளேன். அதே போல எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் சிறப்பாக திட்டங்களை செய்துள்ளனர். தி.மு.க திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளில் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டு பாசனத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடத்தில் தி.மு.க.வுக்கு நன்மதிப்பு உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தி.மு.க.வின் திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. தமிழக அரசின் மீது எதிர்ப்பு அலை இல்லை. மீண்டும் திராவிட மாடல் அரசு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் கூறினார்.