சிவபுரி: பாக்கெட்டில் வெங்காயம் வைத்துக் கொண்டால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று மத்திய அமைச்சர் கொடுத்த அட்வைஸ் நகைப்புக்கு உள்ளாகி வருகிறது.
மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க வினோத யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் அவர் கூறியதாவது, “நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன்படுத்துவதில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைக்கும் போதும் மக்கள் என்னிடம் நான் ஏசி பயன்படுத்தாது குறித்துக் கேட்கிறார்கள். அவர்களிடம் ‘இது சம்பல் மண்ணின் தோல். எனக்கு வெப்பம் ஒரு பொருட்டல்ல’ என்று பெருமையாக சொல்லுவேன்.
நான் பார்ப்பதற்கு இளைஞனாகத் தெரிந்தாலும், எனது ஆன்மா மிகவும் பழமையானது. பழைய விஷயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
இந்த நவீன காலத்தில் அனைவரும் நவீனப் பெட்டிகளை (செல்போன்) சுமந்து செல்கிறார்கள். ஆனால், இந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரோ வெங்காயத்தைச் சுமக்கிறேன். ஆயுர்வேதம் வளர்ச்சி கண்டு வரும் சூழலில், இது போன்ற பாரம்பர்ய நடைமுறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. இருப்பினும் அவருக்கு ஆதரவு குரலும் எழுந்து வருகிறது.