லக்னோ: பயோமெட்ரிக் வருகைப்பதிவில் முறைகேடு… உ.பி.யில் உள்ள மதரஸாக்களில் போலி வருகைப் பதிவு, போலி மாணவர் சேர்க்கை மற்றும் நிதியுதவி பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் உ.பி.யின் பாரபங்கியில் அரசு உதவி பெறும் மதரஸா ஒன்றில் புதிய முறைகேடு அம்பலமாகியுள்ளது.
இங்கு உண்மையான பயோமெட்ரிக் சரிபார்ப்புக்குப் பதிலாக, பிளாஸ்டிக் அட்டைகளைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான ஒரு வீடியோவில் பல ஆசிரியர்களின் பெயர்கள் பிளாஸ்டிக் அட்டைகளில் எழுதப்பட்டு, பெருவிரல் ரேகைக்குப் பதிலாக வருகைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது. பணிக்கு வராத ஆசிரியர்களுக்கும் ஊழியர்கள் வருகைப் பதிவு செய்வதை அந்த வீடியோ காட்டுகிறது.
இது, பின்னர் சம்பளம் வழங்கப் பயன்படுத்தப்படும் பதிவேடுகளில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சம்பவம், கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.