ஐஸ்வால்: மியான்மரில் சின் மாநிலம் இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாநிலம் இந்தியாவுடன் 500 கி.மீட்டருக்கும் அதிகமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அங்கு மியான்மர் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சின் மாநிலத்தின் காப்புச்சிப் கிராமத்தில் மியான்மர் ராணுவம் கடந்த வியாழக்கிழமை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் சோகாவ்தார் கிராமத்துக்கு வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சின் மாநிலத்தின் சிவிலியன் அரசான சின்லாந்து கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜேக்கப் வி.ஜாமா கூறும்போது, ‘‘காப்புச்சிப் பகுதியில், மியான்மர் ராணுவம் தனது விமானப் படையைப் பயன்படுத்தி, பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசியதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன.
அந்த கிராமத்திலோ அல்லது அதைச் சுற்றிலோ எந்தவொரு கிளர்ச்சிப் படையின் முகாமும் இல்லாத நிலையில், கிராம மக்களிடையே அச்சத்தை விதைக்கும் நோக்கில் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக நாங்கள் கருதுகிறோம். சின் மாநிலத்தை மீண்டும் தங்கள் வசமாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியே இதற்கு காரணம்’’ என்றார்.