சென்னை: தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசி.
இந்த பாலிசியில் நிரந்தர, தற்காலிக ஊனங்களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.
இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும். ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.
ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் நிவாரண தொகை கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும். தனிநபர் விபத்து காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி.