கரூர்: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் வருகை தரும் அறிவிப்பு கூடிய விரைவில் தெரிவிப்பார் என கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் மாவட்ட செயலாளர் மதியழகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தான்தோன்றி மலை, ராயனூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், ஜவஹர் பஜார் உள்ளிட்ட எட்டு இடங்களில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் மதியழகன் கூறுகையில், “தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 22 இடங்களில் நீர்மோர் பந்தல்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக இன்று 8 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் நேரில் சந்திக்க வருவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார். அனைவரையும் சந்திக்க உள்ளார். கூடிய விரைவில் தெரிவிப்பார் அதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
,