சென்னை: அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகவிலைப்படியை (Dearness Allowance) 2 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் விஜய் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய அறிவிப்பின் மூலம், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போதுள்ள 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1, 2026 முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாத கால நிலுவைத் தொகையும் அரசு ஊழியர்களுக்குத் தடையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாகப் பயன் பெறுவார்கள். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முதல் மிகப்பெரிய நிதிச் சலுகை இது என்பது குறிப்பிடத்தக்கது.