சென்னை: பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர் தேர்வு முறையை முழுமையாக வெளிப்படையானதாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் போட்டியை ஊக்குவிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் பொதுப்பணித்துறை பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் விதமான நிபந்தனைகள் விதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரர் தேர்வு முழுமையாக ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் நேரடி தலையீடுகள், தேவையற்ற கட்டுப்பாடுகள் மற்றும் போட்டியை கட்டுப்படுத்தும் பேக்கேஜ் டெண்டர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தகுதியிழப்பு அல்லது விண்ணப்ப நிராகரிப்புக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.