சென்னை: தமிழக அரசின் கடன் வட்டிச்செலவு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,486 கோடி உயர்ந்து, 2025-26 நிதியாண்டில் ரூ.67,050 கோடியை எட்டியுள்ளது என அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் கடன் வட்டிச்செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டில் ரூ.41,564 கோடியாக இருந்த வட்டிச்செலவு, 2022-23-ல் ரூ.46,909 கோடியாகவும், 2023-24-ல் ரூ.53,566 கோடியாகவும், 2024-25-ல் ரூ.59,905 கோடியாகவும் உயர்ந்துள்ளது. தற்போது 2025-26-ம் ஆண்டில் ரூ.67,050 கோடியை எட்டியுள்ளது.
இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.25,486 கோடி கூடுதலாக வட்டிக்காக செலவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது 61 சதவீத உயர்வாகும்.
மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.82 சதவீதமும், சொந்த வரி வருவாயில் 34.83 சதவீதமும் கடனுக்கான வட்டிச்செலவாக செலவிடப்படுகிறது. அதாவது அரசு வசூலிக்கும் ஒவ்வொரு ரூ.100 வரியிலும் சுமார் ரூ.35 வட்டிக்காக செலுத்தப்படுகிறது.
மேலும், 2025-26-ம் ஆண்டில் மூலதனச் செலவினம் ரூ.50,911 கோடியாக இருக்கும் நிலையில், வட்டிச்செலவு மட்டும் ரூ.67,050 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது.
இதன்படி, மாதத்திற்கு சராசரியாக ரூ.5,587 கோடி, தினமும் ரூ.184 கோடி மற்றும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.7.7 கோடி வரை வட்டிக்காக செலவிடப்படும் நிலை உருவாகியுள்ளது.