மெக்சிகோ: பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னிட்டு மெக்சிகோவில் பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. மெக்சிகோவில் மட்டும் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், அந்நாடே கால்பந்து திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. இந்த உலகக்கோப்பை போட்டிகளைக் காண வசதியாக, பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவிக்க மெக்சிகோ பள்ளி கல்வித்துறை அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மெக்சிகோ கல்வி அமைச்சகம் வரும் ஜூன் 5-ஆம் தேதியே பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளது. வழக்கமாக ஜூலை 15-ஆம் தேதி தொடங்கும் கோடை விடுமுறை, இந்த ஆண்டு கால்பந்து போட்டிகளுக்காகச் சுமார் 40 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வித தடையுமின்றி உலகக்கோப்பை போட்டிகளைக் கண்டு மகிழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நீண்ட விடுமுறைக்கு பிறகு, மீண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக ஒரு நாடு தனது கல்வி அட்டவணையை இவ்வளவு பெரிய அளவில் மாற்றியமைப்பது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ முழுவதும் இப்போது உலகக்கோப்பை கால்பந்து ஜுரம் இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது.