புதுடில்லி : மயங்கிய மாணவர்… டில்லியில் கடும் வெப்பத்தால் மயங்கிய மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் கூறினர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் கடும் வெப்ப நிலை நிலவுகிறது. டில்லிக்கு, கடும் வெப்பத்துக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அறிகுறி பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தொட வாய்ப்புள்ளதாகவும், கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என்றும் அது கணித்து உள்ளது.
தொடர்ச்சியான வெப்ப அலை நாட்களுக்கு மத்தியில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தின் வெப்பமான இரவுப் பொழுது பதிவாகியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 24 வயது மாணவர், நேற்று முன்தினம் இரவு, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் மயங்கி விழுந்தார். அவர் மீட்கப்பட்டு, அதிகாலை 1:45 மணியளவில் ராம் மனோகர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் கவலைக்கிடமாக உள்ளார் .
வாந்தி, வயிற்றுப்போக்கு, உணர்வுநிலை மாற்றம், மலக்கசிவு மற்றும் மிக அதிக உடல் வெப்பநிலை உள்ளிட்ட அறிகுறிகளுடன், இந்த மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் அஜய் சவுகான் கூறினார்.
அவர் உடனடியாக ஐஸ் தண்ணீரில் வைத்து, குளிர்விக்கப்பட்டார்.
இந்த சிகிச்சைக்குப்பின், அந்த மாணவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். தற்போது நிலவும் கடுமையான வானிலையை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உப்பு கலந்த திரவங்களை அருந்தவும், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும், வெளியில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்யும்போது நிழலான இடங்களுக்குச் செல்லவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.