சென்னை: மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமென போராடும் மக்களை அலட்சியப்படுத்துவது தான் தவெகவின் அனைவருக்குமான ஆட்சியா என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த 2011-க்கு முந்தைய திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக செயல்படும் தற்போதைய தவெக ஆட்சி!
தவெக ஆட்சி அமைத்த 15 நாட்களிலேயே கொடூரக் குற்றச் சம்பவங்கள், சிறுவர் சிறுமியரின் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சியினரின் மாமூல் வேட்டைகள், பெட்ரோல் குண்டு வீச்சுகள், இப்பொழுது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் என தமிழக மக்கள் தினம் தினம் அல்லல்படுவதைக் கண்டு கொள்ளாமல், ரீல்ஸ் மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பாதுகாப்பு, மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டு, கமுக்கமாக கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்த “மாற்று” அரசியலா? தங்களின் அடிப்படைத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமென போராடும் மக்களை அலட்சியப்படுத்துவது தான் தவெகவின் அனைவருக்குமான ஆட்சியா?
“திமுக எனும் தீயசக்தியை அழிக்க வந்த தூயசக்தி” என்று கூறிக்கொண்டு, திமுகவின் “அல்லக்கை” போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தவெக அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் நிசர்சனம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.