புதுடில்லி: நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது…. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த அவசரச் சட்டத்தின் படி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 லிருந்து 38 ஆக உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் தலைமை நீதிபதி (CJI) அல்லாது மற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33லிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டது
அதாவது உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கவும், நீதித்துறை செயல்பாடுகளில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி மற்றும்இன்று என இரு நாட்கள் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டங்களில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக உயர்த்துவதற்காக ஐந்து முக்கிய நபர்களின் பெயர்கள் முறைப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு , மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இவர்களுடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோரது பெயர்களும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த கொலிஜியம் பரிந்துரைகள் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ நியமன ஆணையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.